சேலம் மாவட்டம், தாதகாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன். ரியல் எஸ்டேட் அதிபரான இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இன்று மோகனுக்கு பிறந்தநாள் என்பதால் உறவினர் ஒருவரைத் தொடர்புகொண்டு வீட்டிற்கு கேக் வாங்கிவருமாறு கூறியுள்ளார். அதன்படி உறவினரும் கேக் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றபோது, அங்கு மோகன் இல்லை. பின்னர் செல்ஃபோன் மூலம் அவரை மனைவி மற்றும் உறவினர்கள் தொடர்புகொண்டபோது, அழைப்பு ஏற்கப்படவில்லை.
இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், தெரிந்தவர்களிடம் விசாரித்தும் தகவல் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மோகன் எங்கிருக்கிறார் என்று தேடத்தொடங்கினர்.
இந்நிலையில், இன்று காலையில் ஆட்டையாம்பட்டி சத்யா நகர் பகுதியில் மோகன் சடலமாகக் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மோகன் கொலைக்கான காரணங்கள் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்வதற்காக மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர். கொலை நடந்த இடத்திற்கு மோப்ப நாயும் கொண்டு வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் சேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 50 ஆயிரம் கேட்டேன், 10 ஆயிரம் கொடுத்தார்' - விஞ்ஞானி கொலை வழக்கில் திடீர் திருப்பம்