திருச்சி: கோயில் விழாக்களில் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் நடத்தக் கோரி மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள், மீதான விசாரணையில், “கோயில்களில் திருவிழாக்கள் வழக்கம்போல நடைபெறலாம்.
ஆனால் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தர முடியாது. எனவே, அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் ஒரத்தூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன், ஸ்ரீ செல்லியம்மன் கோயில் தேர் திருவிழா கடந்த மாதம் 8ஆம் தேதி தொடங்கியது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்றிரவு ஆடல், பாடல் நிகழ்ச்சி போலீசார் அனுமதியுடன் விடிய விடிய நடைபெற்றுள்ளது.
இதுபோன்ற நிகழ்ச்சிகள் இரவு 8 மணிக்கு தொடங்கி 10 மணிக்கு முடிவடையும். ஆனால், நேற்றிரவு 10 மணிக்கு தொடங்கிய ஆடல் பாடல் நிகழ்ச்சி, நள்ளிரவு 1.30 மணி வரை நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர் கூறுகையில், “ உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை காற்றில் பறக்க விடும்படி ஆடல், பாடல் கலை நிகழ்ச்சி நடத்திய கோயில் நிர்வாகிகள் மீதும், பணம் பெற்றுக் கொண்டு அனுமதி கொடுத்த கல்லக்குடி போலீசார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கோயில் திருவிழாக்களில் நாடகங்கள் நடத்த அனுமதி... கட்டுப்பாடுகள் என்ன..?