திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள அமைப்பின் அலுவலகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'திருச்சி பாஜக பிரமுகர் விஜய ரகு படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சம்பவத்தை வகுப்புவாத ரீதியாக சித்தரித்து சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த நினைத்த முயற்சியை காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு முறியடித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவத்தில் மதரீதியான உள்நோக்கம் இல்லை என்றும், தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மிட்டாய் பாபு இஸ்லாமிய பெயர் தாங்கிய ஒரு நபர் மட்டுமே. போதைக்கு அடிமையான அந்த இளைஞர் காதல் பைத்தியம் பிடித்து அதன் காரணமாக இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
லவ் ஜிகாத் என்று ஹெச்.ராஜா கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை. தமிழ்நாட்டில் லவ் ஜிகாத் என்ற அமைப்பே கிடையாது. கேரளாவில் மட்டும் இருப்பதாக கூறுகிறார்கள். லவ் ஜிகாத்தின்படி இந்து பெண்ணை காதலித்து இஸ்லாமியராக மாற்றும் முயற்சி திருச்சி கொலை சம்பவத்தில் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் மிட்டாய் பாபு இஸ்லாமியத்தை சரியாக கடைபிடிக்காதவர். அதனால் இங்கு லவ் ஜிகாத் என்ற பெயருக்கு இடமில்லை. இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவோர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார்.