திருச்சி: சென்னை பழவந்தாங்கலை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி தனது பெற்றோருடன் திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப் பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், "திருச்சி தில்லைநகரைச் சேர்ந்த விஷ்வா (வயது 29) என்பவர் என்னுடன் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானார். நாளடைவில் காதலிப்பதாக கூறி, தன்னை ஆபாசமாக புகைப்படம் எடுத்துக் வைத்து கொண்டார்.
அதனை சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என்று மிரட்டி, 25 சவரன் தங்க நகைகள், 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம், மடிக்கணினி, ஐ-போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சியாமளாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, விஷ்வாவை கைது செய்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், "பொறியியல் படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்த விஷ்வா, இன்ஸ்டாகிராமில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களுடன் பழகி, அவர்களை காதலிப்பதாக கூறி, உல்லாசமாக இருந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் பெண்களுடன் தனிமையில் இருக்கும் வீடியோவாக பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டிவந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அப்படி 4 ஆண்டுகளாக சென்னையை சேர்ந்த மாணவி உள்பட 30-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளார்.
அவரது மடிக்கணினியில் 30 இளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்களும், புகைப்படங்களும் சிக்கின. இதையடுத்து அவரிடமிருந்து 2 மடிக்கணினிகள், 2 செல்போன்கள், நகைகள், பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து விஷ்வா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க : மோசடியில் முடிந்த ஆன்லைன் வியாபாரம்... ரூ.35 லட்சம் பறிபோனது..!