திருச்சி மாவட்டம் மணப்பாறை சிவாஜி சிட்டி பகுதியில் வசித்துவருபவர் ஜெகநாதன். இவர் கடந்த காலங்களில் மக்கள் நல்வாழ்வு அறக்கட்டளை, மனித நேய அறக்கட்டளை, நீடியா என்ற நிறுவனம் ஆகியவைகளை நடத்திவந்ததாக கூறப்படுகிறது.
இந்த அறக்கட்டளை மூலம் விதவை மறுமணம், காசநோய், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு போன்றவற்றை நலத்திட்டங்களாக செய்துவந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அறக்கட்டளையின் நலத்திட்டங்களுக்காக கம்போடியா நாட்டிலிருந்து நிதி பெறும் பொருட்டு அந்நாட்டுக்கு திட்ட வரையறை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் கம்போடியா நட்டிலுள்ள கனடியன் எல்.டி வங்கியில் ஜெகநாதன் வங்கிக் கணக்கில் பல கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை நடைபெறுவதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், இன்று காலை முதல் ஜெகநாதன் அவரது குடும்பத்தினர் மத்தியில் அவரது வீட்டில் துணை ஆணையர் மாதவன் தலைமையில் வருமான வரித்துறையினர் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினருடன் சோதனை நடத்தினர்.
அதில், கம்போடியா நாட்டு காசோலை புத்தகம், அறக்கட்டளையைச் சார்ந்த 117 பக்கங்கள் கொண்ட கம்போடியா திட்ட அறிக்கை உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றனர். எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்த ஜெகநாதன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் மீது பலகோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை புகார் வந்துள்ளது மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:முதலமைச்சர் வருகையை முன்னிட்டு மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர்கள்!