திருச்சி மாவட்டம் மணப்பாறை அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் வாக்குக்காக பணம் பட்டுவாடா செய்ய, பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சந்திரசேகரிடம் ஜேசிபி ஓட்டுநராக பணியாற்றும் வலசுபட்டியை சேர்ந்த அழகர்சாமி, அதே பகுதியை சேர்ந்த தங்கபாண்டியன் மற்றும் கோட்டப்பட்டியைச் சேர்ந்த ஆனந்த் ஆகியோரின் வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று (மார்ச் 28) நள்ளிரவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சுமார் ஆறு மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சோதனையில் அழகர்சாமி என்பவரின் வீட்டிலிருந்து ஒரு கோடியை ரூபாய் பணத்தை வருமான வரித் துறையினர் கைப்பற்றினர். கணக்கில் வராத இந்தப் பணம் குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக பணத்தை தனது வீட்டில் வைக்காமல் ஊழியர்களின் வீட்டில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் பதுக்கி வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
மணப்பாறை பகுதியில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளின் வீட்டில் வருமானவரித் துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் அரசியல் கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பாராசூட்டில் பறந்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு