திருச்சி: தஞ்சாவூர் மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். அப்போது பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார், ''ஊழல் என்று வந்த பின்னர் நண்பர்கள், அண்ணன், தம்பி என்றெல்லாம் பார்க்கக் கூடாது.
தமிழகத்தில் ஒரு சாதாரண மனிதன் கூட ஊழல் பட்டியலை தெரிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணுகிறான். எங்களுக்கு இங்கே யாரும் பங்காளிகள் கிடையாது. எங்களுக்கு எல்லோருமே பகையாளிகள் தான். யார் ஊழல் செய்திருக்கிறார்களோ அவர்களை பாஜக பகையாளிகளாகத் தான் பார்க்கும்'' என்றார்.
ரபேல் வாட்ச் சீரியல் நம்பர் மாறி உள்ளது என்கிற கேள்விக்கு, ''சாராய அமைச்சர் சரக்கு போட்டுப் பேசி இருப்பார் (வாட்ச்சை கையில் இருந்து கழற்றி காட்டிய அண்ணாமலை) 147 தான் என் வாட்ச் நம்பர். மேடையில் உடனடியாக படிக்கும்போது எண்கள் சரியாக தெரியவில்லை. திமுக பட்டியலில் நான் வாசித்ததில், எனக்கும் இந்த சொத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று திமுகவினர் இதுவரை ஒருவர் கூட சொல்லவில்லை.
கிட்டத்தட்ட 150 நிறுவனங்களை நாங்கள் சொல்லி உள்ளோம். அதில் ஒன்றிற்கு கூட நான் ஓனர் இல்லை, பங்குதாரர் இல்லை என்று திமுகவினர் ஒருவர் கூட சொல்லவில்லை. அன்பில் மகேஷ், உதயநிதி ஸ்டாலினும் நோபிள் ஸ்டீலில் இயக்குநர்களாக உள்ளனர். நோபிள் ஸ்டீல் கம்பெனியின் இயக்குநராக இல்லை என்று உதயநிதி ஸ்டாலினோ, அன்பில் மகேஷோ இதுவரை கூறவில்லை.
அந்த நோபிள் கம்பெனி மூலமாகத்தான் முதலமைச்சர் துபாய் பயணத்தின்போது, மணி லாண்டரிங் செய்து ஆயிரம் கோடி கொண்டு வந்தார் என நேரடியாகப் புகார் வைக்கிறோம். இதுகுறித்து சிபிஐ-யில் கம்ப்ளைன்ட் செய்ய உள்ளோம். நான்கு வழக்கறிஞர்களை வைத்துக்கொண்டு ஆர்.எஸ்.பாரதி பேட்டி கொடுக்கிறார். அவரை ஏன் அனுப்புகின்றனர். டெக்னிக்கல் ஆடிட்டிங் தான் நாங்கள் கேட்பது. பழைய திமுக மாதிரி உருட்டுவேன், மிரட்டுவேன் என ஆர்.எஸ்.பாரதி கூறுகிறார். என் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தால்,அதையெல்லாம் பார்க்கத் தான் நாங்கள் வந்துள்ளோம்.
எங்களிடமும் வழக்கறிஞர் அணி உள்ளது. வாட்ச் விவகாரத்தில் நம்பர் மாறிவிட்டது என்று கூறியதற்குக் கூட நான் எச்சில் வைத்து அதை அழித்து காட்டிவிட்டேன். நான் இதுவரை எந்த பணமும் கொள்ளையடிக்கவில்லை. இங்கு ஒவ்வொரு அமைச்சர்களும் கிட்டத்தட்ட 10 பி.ஏ.க்கள் வைத்திருக்கிறார்கள். 100 வேலை ஆட்களை வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு சம்பளம் எப்படி வழங்குகிறார்கள்?
என்னுடைய பேங்க் ஸ்டேட்மென்ட்டை 12 வருடமாக ஓப்பனாக நான் கொடுத்துள்ளேன். என்னுடைய மூன்று பி.ஏக்கு சம்பளம் ஐஐஎம்-இல் என்னுடன் படித்த எனது நண்பர்கள் அளிக்கிறார்கள். SWIGGY-ல் நான் சாப்பிடுவது உள்ளிட்ட பில்லைக் கூட என்னால் காட்ட முடியும். நான் கேட்கிறேன். 12 வருடமான எனது அக்கவுண்டின் 200 பக்கங்களை நான் ஒளிவுமறைவு இன்றி காட்டியுள்ளேன். அவர்களால் ஒரு பக்கத்தைக் காட்ட முடியுமா?
வைத்த குற்றச்சாட்டுக்குப் பதில் இல்லை. 2024 நாடாளுமன்றத்தேர்தல் என்பது முழுக்க முழுக்க ஊழலை மையமாக வைத்து தான் இருக்கும். நடைபயணத்திற்கு 49 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். ஒவ்வொருவருக்குள்ளும் ஊழலை பற்றி கேள்வி கேட்க வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது. எந்த கட்சியாவது, அதைப்பேச வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
அதை தான் நாங்கள் செய்து கொண்டு இருக்கிறோம். அடுத்தடுத்து பேசிக்கொண்டே இருப்போம், அடுத்தடுத்து அவதூறு வழக்குகள் வந்து கொண்டே இருக்கும். அடுத்த எட்டு மாதம் இன்னும் ரணகளமாக இருக்கும்” எனப் பேசினார்.
இதையும் படிங்க: மனைவியை கொலை செய்த கணவன்; பழிவாங்க உறவினர்கள் செய்த காரியம்!