மணப்பாறை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சியின் வாயிலாக மணப்பாறை அடுத்த பன்னாங்கொம்புவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று, பேசினார். அப்போது, நாற்பதாண்டு கால கனவை முதலமைச்சர் நிறைவேற்றி இருக்கிறார். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக வந்தபோது, இங்கு இருப்பவர்கள் கல்லூரிக்காக திருச்சி, புதுக்கோட்டை, மதுரை செல்ல வேண்டி இருக்கிறது. நமது பகுதிக்கு கலை கல்லூரி வேண்டுமென்று துண்டு சீட்டு தான் எழுதிக் கொடுத்திருந்தேன்.
அப்போது மைக்கை பிடித்து பேசிய அவர் கவலைப்படாதீர்கள். உங்களின் ஆதரவோடு நாம்தான் வெற்றி பெறப்போகிறோம். வெற்றி பெற்றவுடன் ஓர் ஆண்டு காலத்திற்குள் உங்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றி தருவோம் என கூறினார். அது தற்போது நிறைவேறியுள்ளது. கோரிக்கை நிறைவேற்றி கொடுத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, கல்லூரி முதல்வர் (பொ) ஏ.அங்கம்மாள், கல்லூரி கல்வி இணை இயக்குனர் கே.மேகலா மற்றும் ஒன்றிய குழு தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: சிறார் திரைப்பட விழா - கும்பகோணத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைப்பு