திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை போக்குவரத்து சிக்னல் அருகே சிறிய அளவிலான ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. தற்போது இந்த பகுதியில் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருவதால், ஆஞ்சநேயர் கோயிலை அகற்ற நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் மாரி தலைமையில் சிவசேனா, அனுமன் சேனா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் இன்று (ஜூன் 11) ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர், கோரிக்கைகள் அடங்கிய மனுவை நெடுஞ்சாலைத்துறை பொறியாளரிடம் வழங்கினர்.
அதில், ஆஞ்சநேயர் கோயில் மறைந்த சுதந்திர போராட்ட தியாகி வவேசு-வால் திறந்து வைக்கப்பட்டது. இந்த கோயிலை இந்து மக்கள் பலரும் தினமும் வழிபட்டு வருகின்றனர். தற்போது சாலை விரிவாக்கத்திற்காக இந்த கோயிலை அகற்றுவது இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. அதனால் இந்தத் திட்டத்தை நெடுஞ்சாலைத்துறை கைவிட வேண்டும். இல்லையென்றால் மக்களை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலர், இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து இந்து அமைப்பினர் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.