நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி 11ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
இந்த வகையில் இந்த ஆண்டுக்கான சாலை பாதுகாப்பு வார விழா 11ஆம் தேதி திருச்சியில் தொடங்கப்படவில்லை. மூன்று நாள்கள் தாமதமாக திருச்சி கோட்ட பொறியாளர் அலுவலகம் சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில், இருசக்கர வாகனத்தில் வேகமாகச் செல்லும் வாகன ஓட்டிகளை வழிமறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறும் சூழ்நிலை ஏற்பட்டது. பெண்கள், குழந்தைகளுடன் வந்த வாகன ஓட்டிகளும் தடுமாறி நின்று பிரசுரங்களை வாங்கிச்சென்றனர். இருசக்கர வாகனங்களுக்கு பின்னால் வந்த கனரக வாகனங்களும், திடீரென பிரேக் போட்டு நிறுத்தியதால் அபாயகரமான சூழ்நிலை உருவானது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நெடுஞ்சாலை துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்குவதை நிறுத்திக் கொண்டு மைக்மூலம் சாலை பாதுகாப்பு குறித்து அறிவுரை மட்டும் வழங்கினர்.
மேலும் மூன்று நாள்கள் தாமதமாக சாலை பாதுகாப்பு வார விழா தொடங்கியதற்கான காரணம் குறித்து செல்வ கணேஷ் கூறுகையில், ”தாமதத்திற்கு அரசு தான் காரணம் என்றும், சென்னையிலிருந்து தாமதமாக தகவல் வந்ததால் தற்போது தான் தொடங்கப்பட்டது” என்றும் கூறினார்.
இதையும் படிங்க: தலைக்கவசம் அணிந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி