திருச்சி: மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியில் விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை தனியார் ஆக்கிரமித்து, மண்டபம் கட்டியதாகவும் அதனை மீட்டுத் தரக்கோரியும் மருங்காபுரி வட்டாட்சியரிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் நகர தலைவர் எஸ்.பரமசிவம் பெயரில் அப்பகுதியினை சேர்ந்த பொதுமக்கள், இந்து சமய அமைப்புகள் தரப்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஹெச். ராஜா வாக்குவாதம்
இதனையறிந்து பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, ஆக்கிரமிப்புகளை பார்வையிடுவதற்காக துவரங்குறிச்சிக்குச் சென்றார்.
அவரது வருகையைக் கண்ட காவல் துறையினர், ஹெச். ராஜாவை தடுத்து நிறுத்தினர். இதனால், காவல் துறை, வருவாய்த் துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச். ராஜா , 'தமிழ்நாட்டில் இந்து கோயில்களுக்குச் சொந்தமாக 5 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தது. ஆனால், தற்போது 4 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலமாக குறைந்துள்ளது. தனியாரால் கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதன் காரணமாகவே நிலங்கள் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
கோரிக்கை விடுத்த ஹெச். ராஜா
இதுகுறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளிக்கப்பட்டதையடுத்து, தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை மீட்க உத்தரவிடப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவை தமிழ்நாடு அரசு குப்பையில் போட்டுவிட்டது.
இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கும் இடங்களில், கோயில் நிலங்களை அப்துல் ஹமீத் என்கிற மனுஷ்ய புத்திரனின் உறவினர்கள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்' எனக் குற்றஞ்சாட்டினார்.
மேலும், உயர் நீதிமன்ற உத்தரவின் வரையறைக்குள் கோயில் நிலங்களை மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: வீடுகள் அகற்றம்: அலுவலர்களுடன் விசிக தள்ளுமுள்ளு