திருச்சி மாவட்டம் நவல்பட்டு அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துப்பாக்கி தொழிற்சாலை பிரதான நுழைவுவாயில் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு துப்பாக்கி தொழிற்சாலை கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "கரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். படைக்கலத் தொழிற்சாலைகள் கார்ப்பரேட்மயமாக்கப்படுகிறது. விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகள் தனியார்மயமாக்கப்படுகிறது.
அதேபோல் சுரங்கங்களையும், விமான நிலையங்களையும் தனியார்மயமாக்கும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இவை அனைத்தும் கரோனாவுக்கு துளியும் தொடர்பில்லாத அறிவிப்புகள் என்று கூறி, இவற்றை கண்டிக்கும் வகையில் தேசிய அளவில் உள்ள அனைத்து மத்திய தொழிற்சங்க சம்மேளனம் இணைந்து போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் தொழிலாளர்களுக்கு பஞ்சப்படி உடனடியாக வழங்க வேண்டும் என்றும் புதிய பென்சன் முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
மத்திய அரசு தொழிலாளர் நலனிலும், மக்கள் நலனிலும் கவனம் செலுத்தும் அரசாக இருக்க வேண்டும். இந்த போராட்டத்தை தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஜூலை மாதம் மத்தியிலிருந்து தேசிய அளவிலான சம்மேளனம் குறிப்பிடும் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று அறிவிக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் சமூக இடைவெளியுடனும், முகக்கவசம் அணிந்தும் கலந்துகொண்டனர்.