திருச்சி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் இன்று வாக்கு எண்ணும் மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திருச்சி மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவுகள் மிக சிறப்பாகவும் உற்சாகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. எங்கள் கூட்டணிக்கு பெரும்பான்மை வாக்குகளை மக்கள் அள்ளி வழங்கி இருக்கிறார்கள். வாக்களித்த அனைத்து மக்களுக்கும் எனது சார்பிலும், கூட்டணி சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
திமுக கூட்டணி திருச்சியில் மட்டுமல்ல 39 தொகுதியிலும் வெற்றிபெறும். வாக்குக்கு பணம் கொடுக்காமல் இந்த வெற்றி கிடைத்துள்ளது. இந்த வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி. இந்தியாவிலேயே மோடிக்கு எதிரான எதிர்ப்பு அலை வீசியது. தமிழ்நாட்டில் அதிகமாக இருந்தது. மத்தியில் பாஜக கூட்டணிக்கு தற்போதுள்ள முன்னணி நிலவரம் என்பது தற்காலிகமானது. மாலையில் முடிவுகள் தெரியவரும்.
மத்தியில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இன்றி கூட்டணி ஆட்சி அமையும். ராகுல் காந்தி பிரதமர் ஆவதற்கான வாய்ப்புகள் இன்னும் இருக்கிறது. அவருக்கு இன்னும் வயது இருக்கிறது. தமிழ்நாட்டில் நடைபெற்ற இடைத்தேர்தல் மூலம் நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும். திமுக தலைமையின் ஸ்டாலின் முதலமைச்சராக வாய்ப்பு உள்ளது. அல்லது ஆட்சி கலைந்து மீண்டும் தேர்தல் வரும்" என்றார்.