தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்தக் கூட்டத்திற்கு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் மற்றும் அரசு பணியாளர்கள் சங்க மாநில சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்திற்குப் பிறகு பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”17 ஆண்டுகளாக டாஸ்மாக் பணியாளர்களின் ஊதியம் மாற்றி அமைக்கப்படவில்லை. பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. அதோடு முறையற்ற ஆய்வுகள் மேற்கொண்டு பணியாளர்களிடம் பணம் பறிக்கும் செயலில் அலுவலர்கள் ஈடுபடுகின்றனர்.
மேலும், நியாயவிலை ஊழியர்களுக்கும் ஊக்க ஊதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம், வருவாய்த் துறை ஊழியர்கள் சங்கம், போக்குவரத்து ஊழியர்கள் சங்கம், டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கம் உள்பட 15 சங்கங்களை ஒன்றிணைத்து அனைத்து அரசு பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பு புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற அக்டோபர் 9ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் என ஆயிரம் மையங்களில் பணியாளர்கள் கருப்பு ஆடை அணிந்து கலந்துகொள்வார்கள்.
அதனால் இதற்கு முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டமைப்பு நிர்வாகிகளை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.