கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. ஆனால் வெளிநாடுகளிலிருந்து விமான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்காக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் பிரத்யேக அனுமதியுடன் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு சிறப்பு விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த செங்கிஸ்கான் (36) என்ற பயணி தனது உடலில் மறைத்து வைத்து 407 கிராம் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அலுவலர்கள் தங்கத்தை கைப்பற்றி அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் மதிப்பு 22 லட்சம் ரூபாய் என கண்டறியப்பட்டுள்ளது.
இதேபோல் சில தினங்களுக்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து வந்த சிறப்பு விமானத்தில் 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக இயக்கப்படும் சிறப்பு விமானங்களில் தங்கம் கடத்தப்பட்டு வருவது தற்போது தொடர் கதையாகியுள்ளது.
இதையும் படிங்க: விமான நிலையத்தில் 731 கிராம் தங்கம் பறிமுதல்; 2 பேர் கைது