கரோனா வைரஸ் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடுகளுக்கு விமானம் இயக்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்காக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் பிரத்யேக அனுமதியுடன் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த விமானங்களிலும் தங்கம் கடத்தல் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. அந்த வகையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது.
இதில் வந்த பயணிகளிடம் விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது சிவகங்கையைச் சேர்ந்த பாஸ்கர், ஒரத்தநாட்டைச் சேர்ந்த ராஜா, ராமநாதபுரத்தைச் சேர்ந்த நூர், மானாமதுரையைச் சேர்ந்த உதயன் ஆகியோர் தங்க நகைகள், தங்க கட்டிகளை உடமைகளில் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள 1.773 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அதை கடத்தி வந்த
நான்கு பேரிடம் விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விமான நிலையத்தில் 407 கிராம் தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது!