திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கே.உடையாப்பட்டியைச் சேர்ந்தவர் அருள்ராஜ் (42). இவர் முப்பதுக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்றிரவு(பிப்.3) வீட்டின் அருகேயிருந்த பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு அருகில் அமைந்திருக்கும் தனது தோட்டத்திற்கு நெற்கதிர் அறுவடைக்காக சென்றுள்ளார்.
அருள்ராஜ் குடும்பத்துடன் தோட்டத்திற்கு சென்றதையறிந்த அடையாளம் தெரியாத நபர்கள் பட்டியில் இருந்த ஆடுகளை திருடிச் சென்றுள்ளனர். இதனிடையே, வயலில் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய அருள்ராஜும், அவரது குடும்பத்தினரும் பட்டி இயல்புநிலையில் இல்லாமல் இருந்ததைக் கண்டு, ஆடுகளை எண்ணியுள்ளனர்.
அதில் 22 ஆடுகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அருள்ராஜ் மணப்பாறை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிலுள்ள முத்தப்புடையான்பட்டி பகுதியில் இன்று (பிப்.4) அதிகாலையில், அப்பகுதிக்கு அறிமுகமில்லாத சிலர் ஆடுகளை வாகனத்தில் ஏற்றிச் சென்றது தெரிய வந்தது.
இத்தகவலின் அடிப்படையில் ஆடு திருடிய அடையாளம் தெரியாத நபர்களை மணப்பாறை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:மாற்று சமூகத்தினருடன் பழகியதால் விலை போன அமுமுக நிர்வாகி உயிர் - திண்டுக்கலில் பரபரப்பு