திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த விடத்திலாம்பட்டியில் வசித்துவருபவர் துரைராசு (56). கூலி வேலை செய்துவரும் இவர் வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்துவருகிறார்.
ஆடுகள் மாயம்
நேற்று மாலை வீட்டின் அருகே சாலையோரமாக மேய்ந்துகொண்டிருந்த ஆடுகள் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்டின் உரிமையாளர், காணாமல்போன ஆடுகளைத் தேடும் பணியில் ஈடுபட்டார்.
அவருடன் சேர்ந்து அக்கம் பக்கத்தினரும் தேடிவந்த நிலையில், மணப்பாறை கால்நடை வாரச்சந்தையில் இரண்டு பேர், சந்தேகம் ஏற்படும் வகையில் ஆடுகளுடன் விற்பனைக்கு நிற்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, கால்நடை சந்தைக்குச் சென்றுபார்த்த துரைராசுக்கு அது அவருடைய ஆடுகள்தான் என்பது தெரியவந்தது.
அடி-உதை
பின்னர், அங்கிருந்து தப்ப முயன்ற ஆடு திருடர்கள் இருவரையும் பிடித்த வியாபாரிகள் அடி-உதை கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களை மணப்பாறை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் சங்கர் (32), அவரது மனைவி சகுந்தலா (38) என்பது தெரியவந்தது.
மேலும், அவர்கள் தஞ்சை மாவட்டம் பூதலூரைச் சேர்ந்த அய்யனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் கிராமம் கிராமமாக மினி வேனில் சென்று கழிவுநீர் உறிஞ்சும் பணியினை மேற்கொள்ளுபவர்கள் என்பதும் தெரியவந்தது. கழிவுநீர் சுத்தம் செய்ய வருவதுபோல் நடித்து ஆடுகளைத் திருடியது தெரியவந்துள்ளது.
3 பேர் கைது
இதையடுத்து, மினி வேனை பறிமுதல் செய்த காவல் துறையினர் சங்கர், சகுந்தலா, அவர்களுக்கு உடந்தையாக இருந்த ராமச்சந்திரன் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இச்சம்பவம் சந்தை வியாபாரிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க : யாரும் இல்லை என நினைத்து டேபிள் திருடிய நபர்; காட்டிக்கொடுத்த நிழல்!