திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதி முள்ளிகரும்பூர். இந்த பகுதியில் இருந்து பாளையம் கிராமம் செல்வதற்காக ஒரு சாலை உள்ளது.
அந்த சாலையில் மர அறுவை மில் ஒன்று உள்ளது. அந்த மில் சுற்றுச்சுவர் அருகே 14 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் இன்று சந்தேகத்திற்கிடமான முறையில் எரித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தகவலறிந்த சோமரசம்பேட்டை காவல்துறையினர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். பின்னர் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராம், திருச்சி சரக காவல் துறை துணை தலைவர் ஆனி விஜயா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் அச்சிறுமி அதவத்தூர் பாளையத்தை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகள் கங்காதேவி (14) என்பதும், எட்டரை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கேரளாவில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!