திருச்சி: திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை நவலூர் குட்டப்பட்டு பிரிவு சாலை தேசிய சட்டப் பல்கலைக்கழகம் அருகே ராம்ஜி நகர் காவல் துறையினர்களான காவல் ஆய்வாளர் வீரமணி தலைமையில் உதவி ஆய்வாளர் வினோத் மற்றும் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, அந்த இருசக்கர வாகனத்தின் இருக்கையின் அடியில் 2 கிலோ கஞ்சா பொட்டலம் ஒன்று இருப்பதை அறிந்து அந்த கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்து, அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.
இந்நிலையில் விசாரணை செய்தபோது அந்த நபருக்கு கஞ்சா வழங்கியது ராம்ஜிநகர் சின்ன கொத்தமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மதன் என்கின்ற மதுபாலன் (29) என்பதும், இவர் மீது ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் 14 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
இந்நிலையில் இவர் அந்தப் பகுதியில் உள்ள கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சாவை மொத்த விற்பனை செய்து வருவதாகவும், அவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் மூலம் பூங்கொடி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே பதுக்கி வைத்திருந்த 19 கிலோ கஞ்சா மூட்டை ஒன்றைப் பறிமுதல் செய்து மொத்தம் 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த நபர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரி; தப்பிய குற்றவாளிகள்!