கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் திருச்சி காந்தி மார்கெட் மூடப்பட்டுள்ளது. இங்கு செயல்பட்டு வந்த காய்கறி கடைகள் அனைத்தும் திருச்சி மாநகரில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தற்காலிக இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையில், திருச்சி காந்தி மார்க்கெட்டிற்கு மாற்றாக திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் அருகே கள்ளிக்குடியில் புதிதாக காய்கறி வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த காய்கறி வணிக வளாகத்திற்கு காந்தி மார்க்கெட் வியாபாரிகள் செல்ல தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
இது தொடர்பான வழக்கில் காந்தி மார்க்கெட் தற்போது உள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அதனால் ஊரடங்கு தளர்வுக்கு பின்னரும் திருச்சி காந்தி மார்க்கெட் திறப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமையில் திருச்சி காந்தி மார்க்கெட் திறப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று (ஆகஸ்ட் 31) திருச்சி பழைய பால்பண்ணை பகுதியில் உள்ள வெங்காய மண்டி வளாகத்தில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விக்ரம ராஜா, “திருச்சி காந்தி மார்க்கெட்டை நம்பி 15 ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் உள்ளது. அதனால் திருச்சி காந்தி மார்க்கெட் திறப்பது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் சந்தித்து முறையிட உள்ளோம். அப்போது பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட உள்ளது. நிச்சயமாக திருச்சி காந்தி மார்க்கெட் திறக்கப்படும். இதற்கு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
திருச்சி மாவட்டம் கள்ளிக்குடியில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி வணிக வளாகத்தில் மொத்தம் 300 கடைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் திருச்சி காந்தி மார்க்கெட்டில் இரண்டாயிரம் வியாபாரிகள் உள்ளனர். ஆகையால் திருச்சி காந்தி மார்க்கெட் கண்டிப்பாக செயல்பட வேண்டும். சென்னை கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் பலர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
வியாபார சங்கங்களின் கோரிக்கையை ஏற்று தற்போது இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு உள்ள தடையை நீக்கவும் முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும். ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு வியாபாரிகள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.