திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
அதேபோல வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் அதிகளவில் முறையான அனுமதியின்றி வெளிநாட்டு பணத்தை கடத்தி செல்வதும் அதிகரித்துள்ளது. அந்த வகையில், நேற்று (ஜனவரி 10) திருச்சியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாய் செல்ல தயார் நிலையில் இருந்தது.
இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது திருச்சியைச் சேர்ந்த சதாம் உசேன் என்பவர் தனது உடமையில் மறைத்து 41,800 யூரோ மற்றும் 50 ஆயிரம் திர்கம் வெளிநாட்டு பணத்தை கடத்த இருந்தது தெரிய வந்தது.
இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து சதாம் உசேனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.46,99,840 என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி பள்ளியில் 5 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு தொடங்க அனுமதி