திருச்சி மாவட்டம், சமயபுரம் காவலர்கள் அங்குள்ள பழைய பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருச்சி கீழபுலிவார் ரோடு பகுதியைச்சேர்ந்த முருகன்(50), இவரது மகன் வீரபாண்டி(33), அவருடைய உறவினர்களான சுப்ரமணி, பாலா ஆகிய நான்கு பேரைப் பிடித்து காவலர்கள் விசாரணை செய்துள்ளனர்.
பின்னர், அவர்கள் நான்கு பேரையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போது முருகன் உயிரிழந்துள்ளார். முருகனை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போது அவர் தப்பி ஓடமுயற்சித்ததாகவும் அப்போது ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக அவர் இறந்ததாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து முருகனின் உடல் உடற்கூறாய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முருகன் இறந்த தகவலறிந்த அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு காவல் துறையினர் தான் முருகனை அடித்துக் கொலை செய்துள்ளனர் என்றும்; முருகன் இறப்பிற்குக் காரணமான காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை முருகனின் உடலை வாங்கப்போவதில்லை என்றும் தெரிவித்தனர்.
இதனையடுத்து, மருத்துவமனைக்கு வந்த திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன், காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் ஆகியோர் முருகனின் உறவினர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி, முருகன் இறப்பு தொடர்பாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதன்பின்னர் முருகனின் உறவினர்கள் முருகனின் உடலைப் பெற்றுச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து முருகனை விசாரணைக்கு அழைத்துச் சென்ற உதவி ஆய்வாளர் செந்தில், தலைமைக் காவலர் விஜயகுமார், காவலர் நரேந்திரன் ஆகிய மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி உத்தரவிட்டார். மேலும், இச்சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க: வைகை ஆற்றில் இரண்டு நாள்களுக்குப்பின் மீட்கப்பட்ட இளைஞரின் சடலம்..!