திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் இன்று (செப்.25) நடைபெற்றது. இந்த குறைதீர் கூட்டத்தில் திருச்சி மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்த பொதுமக்கள், பல்வேறு குறைகளுக்கு தீர்வு கோரி மனு அளித்தனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பெருவளப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன். விவசாயம் பார்த்து வரும் இவர், கனவில் தெய்வங்கள் 20 வருடமாக தன்னிடம் பேசி வருவதாகவும், அவ்வாறு அவரிடம் பேசும் தெய்வங்களுக்கு யோகம் ஏற்படும் எனவும் கூறி வருகிறார்.
மேலும், இவரிடம் தெய்வங்கள் நீ ஜனாதிபதி ஆனால் தான் நாட்டு மக்கள் செழிப்பாக இருப்பார்கள் என கூறி கனவில் கையெழுத்து வாங்கியதாகவும், இந்த செய்தியை பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களிடமும் தெரியப்படுத்த, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்துள்ளதாகவும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கலகலப்பு ஆனது.
இதையும் படிங்க: "கைகளை கால்களாக நினைத்து நன்றி சொல்கிறோம்" - மகளிர் உரிமை தொகைக்கு உதயநிதியிடம் நன்றி கூறிய பெண்கள்!
மேலும் விவசாயி தமிழரசன் கூறும்போது, “20 வருடங்களாக தெய்வங்கள் என்னிடம் பேசிக்கொண்டு உள்ளது. ஆனால் கடந்த 3 வருடமாக என்னை ஜனாதிபதி ஆகச் சொல்லி சத்தியம் வாங்கி உள்ளது. இதை ஊரில் சொன்னால் யாரும் நம்ப மாட்டேன் என்கின்றனர். இது குறித்து என்னுடைய சகோதரர் மற்றும் உறவினர்களிடம் கூறும்போது நம்பவில்லை என கூறி சிரித்தனர்.
நான் ஜனாதிபதி ஆனால் நாட்டு மக்களுக்கு நன்மை செய்வேன். நாடாளுமன்றதில் இருந்து வரும் கோப்புகளை சரியாக உள்ளதா என பார்த்து கையெழுத்து போடுவேன்” என்றார். அதனைத் தொடர்ந்து, அவரது மனுவை வாங்க மறுத்த அலுவலர்கள், இந்த மனுவை கணினியில் ஏற்ற முடியாது எனக் கூறி அவரை திருப்பி அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொழில்துறை அமைப்புகள் கோவை ஆட்சியரிடம் மனு!