திருச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இரு நாட்களுக்கு முன்பு, பிரபல பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது அவரை ரங்கராஜ நரசிம்மன் என்பவர், 'நீங்கள் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்' எனக்கூறி தடுத்து நிறுத்தி, ஆபாசமாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து ஜாகிர் உசேன், "தாம் இக்கோயிலுக்கு அடிக்கடி வருவது வழக்கமான ஒன்றுதான். யூ-ட்யூப் சேனல் நடத்தும் ரங்கராஜனுக்கு என்னைத் தடுக்க என்ன உரிமை உள்ளது. எந்த மதத்தைச் சார்ந்தவரும் மனமுவந்து எந்த தெய்வத்தையும் வணங்கலாம் என்ற நடைமுறை உள்ளது.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அலுவலர்களிடம் புகார் அளித்துள்ளேன்" என்று தெரிவித்திருந்தார்.
'அறிக்கை கேட்கப்பட்டுள்ளது'
இந்தநிலையில் அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், "பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் ஸ்ரீரங்கம் கோயிலில் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து கோயில் இணை ஆணையரிடம் அறிக்கை கேட்டுள்ளேன்.
அறிக்கை பெற்றபின் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். கோயிலுக்குள் யார் செல்ல வேண்டும் என்பதை கோயில் நிர்வாகம் மட்டுமே முடிவு செய்யும்.
தனிப்பட்ட நபர்கள் யாரும் சட்டத்தை கையில் எடுத்துவிட முடியாது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'ரஜினியின் ரசிகனாக.... ; ஜெ. தீபா இதைச் செய்யணும்' - கலகல செல்லூர் ராஜூ