திருச்சி மாநகர காவல்துறையும், ஜோசப் கண் மருத்துவமனையும் இணைந்து காவல் துறையினருக்கு கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. திருச்சி கே.கே. நகர் மாநகர ஆயுதப்படை வளாகத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடந்த இந்த முகாமில் காவலர்களும், அவர்களது குடும்பத்தினருக்கும் கண் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த முகாமை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் தொடங்கி வைத்து பேசுகையில், “அனைத்து சூழ்நிலைகளிலும் பணிபுரிய வேண்டிய கட்டாயம் காவல்துறையிருக்கு உள்ளது. அதனால் கண் பரிசோதனை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. காவல்துறையினர் கண்களை நன்கு கவனித்துக் கொள்ளவேண்டும். வேலைப்பளு காரணமாக கண்கள் மீது யாரும் கவனம் செலுத்துவதில்லை. அதற்காகத்தான் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இந்நிகழ்ச்சியில், காவல்துறை துணை ஆணையர் மயில்வாகனன், நிஷா, மருத்துவர்கள் பிரதீபா, ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அலுவலர் சுபா பிரபு, காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காவல்துறையினருக்கான இந்த கண் பரிசோதனை முகாமில் பார்வை குறைபாடு, விழித்திரை பரிசோதனை, மங்கலான பார்வைக்கான பரிசோதனை, படிப்பதற்கான கண்ணாடி மாற்ற பரிசோதனை, ஒற்றைத் தலைவலி, கண் சிவப்பு ஏற்படுதல், கண்ணில் நீர் வடிதல் உள்ளிட்ட இதர நோய்களுக்கான பரிசோதனை செய்யப்பட்டது.