திருச்சி: மணப்பாறை, பாரதியார் நகர் பகுதி பொதுமக்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமூக நல ஆர்வலர் அமைப்பு, அப்பகுதி பொதுமக்கள் ஆகியோர் இணைந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழு உறுப்பினர் சுரேஷ், சமூக நல ஆர்வலர் அமைப்புத் தலைவர் செங்குட்டுவன் தலைமையில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி கலந்துகொண்டு உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.
கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாரதியார் நகர் பகுதி பொதுமக்கள் தாங்களாகவே தங்கள் பகுதிக்கு விராலிமலை சாலையில் இருந்து மண் சாலை அமைத்தனர். அதன் பிறகு இரண்டரை ஆண்டுகளாகியும் நில உச்சவரம்பு சட்டத்தின்படி தனியாருக்குச் சொந்தமான அந்த இடத்தை கையகப்படுத்தாமல் வருவாய்த்துறை காலதாமதம் செய்வதால் பாரதியார் பகுதி பொதுமக்கள் சாலை வசதி இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், வருவாய்த் துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி சாலை வசதி ஏற்படுத்தி தருவதாகக் கூறும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதியிடம் பேசிய மணப்பாறை வட்டாட்சியர், உரிய பதில் தராததால் வருவாய் கோட்டாட்சியர் வரும் வரை உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லை எனத் தொடர்ந்து இப்பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ”போராட்டக் களத்திற்கு நேரில் வந்த மணப்பாறை வட்டாட்சியர் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறதா என்று பார்ப்பதற்காக தான் வந்ததாக கூறி செல்கிறார். வட்டாட்சியரும், மாவட்ட ஆட்சியரும் அலுவலகத்திற்கு உள்ளேயே இருந்து கொண்டால் மக்கள் பிரச்னைகளை பார்ப்பது யார்?
ஆட்சி மாறினாலும் இதுபோன்ற அலுவலர்கள் உடனே மாறுவது இல்லை. இவர்கள் மக்கள் பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் திமுக ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறார்கள்” என்று பாலபாரதி குற்றம்சாட்டினார்.