பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் 1944 ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி பிறந்தவர் செல்வராஜ். பொறியியல் பட்டதாரியான இவருக்கு வயது 74 ஆகும். செல்வராஜ் 1987ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுக செயலாளராக பதவி வகித்துள்ளார்.
1980 ஆம் ஆண்டு முதல் 1984ஆம் ஆண்டு வரை திருச்சி மக்களவைத் தொகுதி எம்பி ஆக பதவி வகித்த இவர் மதிமுக கட்சியை வைகோ தொடங்கிய போது அங்கு சென்ற திமுக மாவட்ட செயலாளர்களில் செல்வராஜும் ஒருவர்.
பின்னர், மீண்டும் திமுகவில் இணைந்த செல்வராஜ் 2006 ஆம் ஆண்டு முசிறி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று திமுக அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட செல்வராஜூக்கு வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தி அடைந்த அவர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
கடந்த ஒரு ஆண்டு காலமாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த செல்வராஜை சமீபத்தில் திருச்சி வந்த திமுக தலைவர் ஸ்டாலின் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்நிலையில் இன்று மாலை 6.15 மணிக்கு அவர் காலமானதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். வனத்துறை அமைச்சராக இருந்தபோது துறை சார்ந்த புள்ளிவிபரங்களை குறிப்பின்றி மனப்பாடமாக சட்டமன்றத்தில் பேசும் திறன் படைத்தவர் செல்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.