திருச்சி: மணப்பாறை அடுத்த கே.உடையாபட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார், இவரது மனைவி பிப். 27ஆம் தேதி மாலை அவரது கால்நடைகளை வயல்வெளியில் மேய விட்டு பின்னர் வீட்டிற்கு ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜான் பிரிட்டோ என்பவர் அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டு குட்டி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர் நிற்காமல் சென்றுள்ளார்.
இதனால் கோபம் அடைந்த ராஜ்குமார் ஜான் பிரிட்டோவை நேரில் பார்த்து திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜான் பிரிட்டோ தான் வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்துக்கொண்டு ராஜ்குமார் வீட்டிற்கு சென்று உங்களை என்ன செய்கிறேன் பார், நான் நினைத்தால் சுட்டு விடுவேன் என்று துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் பதறிப் போன ராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர், இதுகுறித்து மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையின் அடிப்படையில் ஜான் பிரிட்டோவிடம் இருந்த கை துப்பாக்கியை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
முன்னதாக கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் குண்டு வைக்க தெரியும், என்று பேசிய சர்ச்சையை கிளப்பியிருந்தது. இந்நிலையில், திருச்சியில் ஆட்டுக்குட்டியின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் கை துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தால் முன்னாள் ராணுவ வீரர் கைதாகி கம்பி என்னும் சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: “ரூ.5,000 கோடி என்னிடம் உள்ளது” தொழிலதிபர்களை குறி வைத்த மோசடி மன்னன் கைது!