திருச்சி: தென்னூர் உழவர் சந்தை அருகில் உள்ள மருத்துவர் ரொகையா இல்லத்திற்கு மதிமுகவின் தலைமை கழக நிலைய செயலாளர் துரை வைகோ சென்று பாத்திமா பீவி படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், வழக்கு விசாரணையில் உள்ளது. அதைப் பற்றி நான் தனி நபராக கூறினால் சரியாக இருக்காது. ஆளாளுக்கு ஒன்று கூறுவார்கள். பொது மக்களாக இருந்தாலும் சரி நானாக இருந்தாலும் சரி, இதை பற்றி கருத்து கூறுவது ஆரோக்கியமாக இருக்காது என்றார்.
திமுக அதிமுக அண்ணன் தம்பி என்று அமைச்சர் நேரு கூறியதற்கு பதிலளித்த அவர், நம்முடைய இயக்க ரீதியாக வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் திமுகவும் சரி அதிமுகவும் சரி திராவிட கொள்கை பொறுத்த வரைக்கும் ஒன்றுதான் என்ற அர்த்தத்தில் அவர் சொல்லி இருப்பார். நான் யூகிக்கிறது என்னவென்றால் இந்த மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் வேரூன்ற கூடாது என்பதற்காக திமுக அதிமுக அண்ணன் தம்பி என்று சொல்லி இருக்கலாம் என கூறினார்.
பத்து சதவீத இட ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தலைவர் வைகோ நீண்ட அறிக்கை இதைப்பற்றி சொல்லி இருக்கிறார். அது ஒரு முறையான ஒதுக்கீடு இல்லை என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு. பொருளாதாரத்தால் பின் தங்கியவர்கள் அப்படி என்று கூறினால் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தார் அவர்களும் தானே பின் தங்கியுள்ளனர், அவர்களையும் சேர்க்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: மாணவி பிரியா உயிரிழந்த விவகாரம்: வழக்கு பிரிவு மாற்றம்