திருச்சி: திருச்சி மாவட்டம், முசிறி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், வடக்கு மாவட்ட அவைத் தலைவருமான பிரின்ஸ் தங்கவேல், கடந்த டிசம்பர் 17ஆம் தேதி காலமானர். இந்த நிலையில், இன்று அவரது திருவுருவப் படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முசிறியில் உள்ள பிரின்ஸ் தங்கவேல் இல்லத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் “சமீபத்தில் சென்னை, தூத்துக்குடி கனமழை குறித்து வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாததால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
தமிழக அரசு சார்பில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், பல சேதங்கள் தடுக்கப்பட்டிருக்கும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மனித உயிர்களையும், கால்நடைகளையும் இழந்துள்ளோம். குறிப்பாக, திமுக செய்யும் தவறுகளை ஊடகங்களில் வரவிடாமல் இருட்டடிப்பு செய்கின்றனர்" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "திமுகவினர் ஊடகத்தின் வாயிலாக, நடக்காததை நடந்ததுபோல மக்களிடையே பொய்யான பிம்பத்தை ஏற்படுத்துகிறது. தென் மாவட்டங்களின் மழை வெள்ளச் சேதம் முழுமையாக வெளிவரவில்லை. மேலும், தமிழக மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனைக் கருத்தில் கொள்ளாமல், இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்று விட்டார்.
தமிழக முதலமைச்சரைப் பொறுத்தவரையில், நாட்டு மக்களைப் பற்றி அவருக்குக் கவலை இல்லை. அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பதவிக்கு வரவேண்டும், கொள்ளையடித்த சொத்துக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று, அவரது வீட்டு மக்களைப் பற்றிதான் கவலை" என்று குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: 'நான் இங்கு நிற்பதற்கு அவர்தான் காரணம்..' விஜயகாந்த் குறித்து நடிகை நளினி மற்றும் நிரோஷா உருக்கம்..