திருச்சி: இனாம்குளத்தூர் பகுதியில் 30 ஆண்டுகளாக மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இப்பள்ளியில் 6ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பயின்றுவருகின்றனர். இந்நிலையில், 12ஆம் வகுப்பு ஆங்கிலப் பாட ஆசிரியர் ஒருவர் கடந்த பல நாள்களாகவே 12ஆம் வகுப்பு மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், கடந்த 20 நாள்களுக்கு முன்பு பள்ளி தலைமை ஆசிரியர் ஆங்கிலப் பாட ஆசிரியரை 10 நாள்கள் பள்ளிக்கு வரக்கூடாது என இடைநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் பணிக்குச் சேர்ந்த இவர் மீண்டும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டும் வரம்பு மீறியும் செயல்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனடிப்படையில் பெற்றோர், கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு பள்ளி ஆசிரியரை கைதுசெய்ய வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் பள்ளியில் ஆசிரியரிடம் விசாரணை செய்துவந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் பள்ளி ஆசிரியர், சக ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், மாணவிகள், பெற்றோரிடம் விசாரணை செய்தார்.
இதனைத் தொடர்ந்து ஆசிரியரைக் கைதுசெய்த காவல் துறையினர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆங்கிலப் பாட ஆசிரியரைப் பணியிடை நீக்கம்செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி உத்தரவிட்டார்.
மேலும், ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: காதலித்த பெண்ணுக்குத் திருமணம்: மனமுடைந்த உணவக மேலாளர் தற்கொலை!