திருச்சி: மதிமுக கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இன்று (டிச.25) நடைபெற்றது. இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் மதிமுக முதன்மை செயலாளர் துறை வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய துரை வைகோ கூறுகையில், "மதிமுகவின் பலம் என்பது தொண்டர்கள் தான். பாராளுமன்ற தேர்தலில் மதிமுக-விற்கு எத்தனை தொகுதி என்பதைத் தலைமைக் கழகம் முடிவு செய்யும். எங்களுடைய கூட்டணிக் கட்சியான திமுக எடுக்கும் முடிவைப் பொறுத்தே முடிவு செய்யப்படும். நாடாளுமன்றத் தேர்தலில் 5 முதல் 6 தொகுதிகள் வேண்டும் என்று மதிமுக தொண்டர்கள் விரும்புகின்றனர். பல தேர்தல்களில் திருச்சியில் மதிமுக வெற்றி பெற்று உள்ளது. திருச்சியில் மதிமுக போட்டியிடுவது என்பது மதிமுக தலைமை தான் முடிவு எடுக்கும்.
தேசிய பேரிடர் நிதியை முடிவு செய்வது மத்திய அரசு. 12ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என்றால் அதில் 9ஆயிரம் கோடி மத்திய அரசு, விடுபட்ட 3 ஆயிரம் கோடி மாநில அரசு கொடுக்க வேண்டும். மிக்ஜாம் புயல் சேதாரம் 19ஆயிரம் கோடியாக மத்தியக்குழுவால் கணக்கிடப்பட்டது. ஆனால், மத்திய அரசு வெறும் ஆயிரம் கோடியே கொடுத்துள்ளனர். கடந்த வருட நிதியைச் செலவு செய்யவில்லை என கூறுகின்றனர்.
ஆயில் கசிவு காரணமாக, 22 மீனவ கிராமங்கள் பாதிப்படைந்துள்ளது. ஆயில் கசிவு மூலம் படகுகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. புதிய படகு வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். மழை பாதிப்பில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டுமே ரூ.10 ஆயிரம் கோடி தேவைப்படும். வீடு, உடைமை, கால்நடை அனைத்தும் பாதிப்படைந்து உள்ளது. தேசிய பேரிடர் என அறிவிக்க முடியாது என மத்திய அரசு கூறியுள்ளது. ஒதுக்க வேண்டிய நிதியும் இன்னும் அறிவிக்காமல் உள்ளது. இதெல்லாம் வேண்டுமென்றே மத்திய அரசு செய்வதாகச் சந்தேகம் உள்ளது.
அதிமுக ஆட்சியில் வந்த மழை பாதிப்பில் 17ஆயிரம் கோடி கேட்டதில் 5ஆயிரம் கோடி கொடுத்துள்ளனர். அதிமுக ஆட்சியில் கூட கேட்ட நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்காமல் உள்ளனர். பல விஷயங்களில் ஆளுநருடைய செயல்பாடுகளால் பலரின் வேலை பறிபோய் உள்ளது.
இதற்குச் சான்றாக, ஜிஎஸ்டி வரியில் தமிழ்நாடு அரசுக்கு 1 ரூபாய்க்கு 25 பைசா மட்டுமே கொடுக்கிறது. ஆனால், வெளி மாநிலங்களுக்கு 1 ரூபாய் GSTக்கு 1 ரூபாய் 25 பைசா பெறுகின்றனர். தமிழ்நாடு வளர்ச்சியின் பின்னடைவிற்கு பாஜக அரசு தான் காரணம். முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி வெள்ள பாதிப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட அரசு அதிகாரிகள் முழு வீச்சில் செயல்பட்டனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திராவிட மாடலா..? திண்டாடும் மாடலா..? - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சரமாரி கேள்வி