திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. ரிக் இயந்திரத்தின் மூலம் அதன் அருகே புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றுவருகிறது.
இப்பணிகள் ஒருபுறம் மும்முரமாக நடந்தாலும் வேடிக்கை பார்க்கவரும் மக்கள் கூட்டத்தால் பெரும் அவதி ஏற்பட்டுள்ளது. மணப்பாறையிலிருந்து நடுக்காட்டுப்பட்டிக்கு வரும் சாலையில் தடுப்புகளை அமைத்து இரு சக்கர வாகனங்களில் வரும் நபர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்துகின்றனர். ஆனால் அவர்கள் வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு சம்பவ இடத்திற்கு நடந்தே வந்துவிடுகின்றனர்.
காவல்துறையினரும் அவர்களை முடிந்தவரைக் கலைந்து செல்லும்படி அறிவுறுத்துகின்றனர். ஆனால் அவர்கள் யாரும் கேட்பதாக இல்லை. காவலர்கள் இதுவரை அதிரடி நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் பொறுமையாகவே கலைந்து செல்லும்படி கூறிவருகின்றனர்.
மேலும், அதிகப்படியான மொபைல்ஃபோன்கள் இந்தக் கிராமத்தில் தற்போது இயங்குவதால் நெட்வொர்க் பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. இதனால் முக்கிய தகவல்களைப் பரிமாற முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது அங்கு குவிந்துள்ள கூட்டத்தினரால் அவசர தேவைகளுக்குக் கூட வாகனங்கள் வெளியே சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.