தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் பள்ளி மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு ஓவியப்போட்டி மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது. இப்போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாட்டில் முதல் முறையாக காணொலி காட்சி மூலம் தீயணைப்புத் துறை இயக்குநர் சைலேந்திரபாபு பரிசுகளையும், பாராட்டுதல்களையும் வழங்கி ஊக்கப்படுத்தினார். இவ்விழாவில் தீயணைப்புத் துறை மத்திய மண்டல துணை இயக்குநர் மீனாட்சி விஜயகுமார் பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தீயணைப்புத்துறை மத்திய மண்டல் துணை இயக்குநர் மீனாட்சி பேசுகையில், “தீயணைப்புத் துறையில் மீட்பு பணியில் தைரியமாக செயல்படும் அலுவலர்களுக்கு விருது கொடுக்க முயற்சிசெய்துவருகிறோம். இந்த துறையில் செய்யப்படும் பணிகள் மிகவும் கடுமையானது. உதாரணமாக, மாட்டை காப்பாற்றுவதை சொல்லலாம். மாட்டை காப்பது லேசான காரியமல்ல. கிணற்றுக்குள் விஷவாயு இருந்தால் அது மீட்பு பணியில் ஈடுபடுபவரின் உயிரையே பாதிக்கும். தற்போது சிறிய தெருக்களுக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபடும் அளவுக்கு தீயணைப்புத் துறை இயக்குநர் சைலேந்திரபாபு முயற்சிகள் மேற்கொள்கிறார், இதற்காக அதிவிரைவு இருசக்கர வாகனங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன” என்றார்.