கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள நாடகம் - நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டு துறையில் பதிவுப் பெற்றுள்ள கலைஞர்களுக்கு மட்டும் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள உள்ள வள நாடு, கைகாட்டி, கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் 75க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த நாடகக் கலைஞர்கள் கடந்த சில மாதங்களாக போதிய நிகழ்ச்சிகள் கிடைக்காததால் வருவாய் இல்லாமல் வறுமையில் இருந்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுக்கு நாடகக் கலைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில் கரோனா நோய் அச்சம் காரணமாக நாடகக் கலைஞர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். மேலும் ஊரடங்கால் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
எனவே தமிழ்நாடு அரசு நாடக நடிகர்களின் குடும்பங்களையும் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசு 3 மாதங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ஒவ்வொரு கலைஞர்களுக்கும் வழங்க முன்வர வேண்டும்.
நாடகத்தில் ராஜாவாகவும், வள்ளலாகவும் நடித்து மக்களை மகிழ்விக்கும் நாடக கலைஞர்கள் ஆகிய நாங்கள் நிஜவாழ்வில் வறுமையில் வாடுவதாகவும் உரிய பதிவு இல்லாததால் அரசின் உதவியும் தங்களுக்கு கிடைக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.