திருச்சி: திருச்சி மாவட்டம் , அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அப்துல்காதர். 12ம் வகுப்பு பயின்று வரும் இவருக்கு வலது மூட்டில் வீக்கம் ஏற்பட்டு , நடக்க சிரமப்பட்டத்தை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொடை எலும்பில் 15 செமீ நீளம், 15 செமீ அகலத்தில் 'ஆஸ்டியோ சார்கோமா' என்ற புற்றுநோய் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் அப்துல்காதருக்கு எலும்பு முறிவு சிகிச்சைதுறை தலைவர் கல்யாணசுந்தரம் மேற்பார்வையில் மருத்துவர் வசந்தராமன் தலைமையில் மருத்துவர்கள் நவீன முறையில் சிகிச்சை அளித்தனர்.
6 மணி நேர சிகிச்சையில் புற்றுநோய் கட்டியினை அகற்றி , அதற்கு பதிலாக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட செயற்கை மூட்டு உபகரணத்தை பொருத்தி சாதனைப்படைத்தனர். தற்போது அப்துல்காதரால் இயல்பாக நடக்க முடிகிறது.
இதையும் படிங்க: புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல்கள்