கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த வாரம் திருச்சி பொன்மலை பணிமனையில், 503 பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள அனைத்து இடங்களிலும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களே நிரப்பப்பட்டுள்ளனர்.
இந்தப் பணியில் சேருவதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் பயிற்சி முடித்து காத்திருந்து வரும் நிலையில், ரயில்வேயின் இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில், தெற்கு ரயில்வே பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்தும், ரயில்வே பணிமனையில் பயிற்சி முடித்தவர்களுக்கு உடனடியாக பணி வழங்க வலியுறுத்தியும் பொன்மலை ரயில்வே பணிமனையை முற்றுகையிட்டு, திமுகவினர் இன்று (ஆக.10) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக, தெற்கு மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை ஆர்பாட்டத்தில் ஏராளமான ரயில்வே தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.