திருச்சி: நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் திருச்சி மாவட்டம் திமுகவின் கோட்டையாக மாறி இருக்கிறது.
கடும் பனிப்போர்
திருச்சியில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, தெற்கு மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய இருவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் இருவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே பனிப்போர் தொடர்ந்து நடைபெற்று வருவது திருச்சியில் ஊரறிந்த விஷயமாக உள்ளது.
திமுகவினர் இல்லாத அன்பில் மகேஷ் நிகழ்ச்சி
திருச்சி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று (ஜூன்.28) பாட புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ கதிரவன், அவரது ஆதரவாளர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர்.
மண்ணச்சநல்லூர் ஒன்றிய தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பெரும்பாலானோர் கலந்துக் கொள்ளவில்லை. குறிப்பாக, திமுக திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளரும், முசிறி எம்எல்ஏவுமான காடுவெட்டி தியாகராஜன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.
இதேபோல் திருச்சி மாவட்டம் துறையூர், கொப்பம்பட்டி பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியிலும் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் மட்டுமே கலந்து கொண்டார். இதர திமுக நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
கே என் நேரு நிகழ்ச்சிகள் தடபுடல்
இதுவே அமைச்சர் கே.என். நேரு கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சி என்றால் தடபுடல் வரவேற்பு, தாரை தப்பட்டை, பேனர், பட்டாசு என நிகழ்ச்சி நடக்கும் இடம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும்.
ஆனால் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் திமுக முக்கிய நிர்வாகிகள் பெயரளவுக்கு கூட கலந்துக்கொள்ளாமல் புறக்கணித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காடுவெட்டி தியாகராஜன் அமைச்சர் நேருவின் ஆதரவாளர். அதனால், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிகழ்ச்சிக்கு சென்றால் பிரச்னை ஏற்பட்டுவிடும் என்ற காரணத்தால் அவர் கலந்து கொள்ளவில்லை என்று திமுகவினர் தெரிவித்தனர்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் கே.என்.நேரு நேருவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்ற எண்ணத்திலேயே திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்துக் கொள்ளவில்லை என்பதை திமுகவினரை ஒப்புக்கொண்டனர்.
இதையும் படிங்க: 'திமுக ஆட்சிக்கு வந்ததும் அணில்களுக்கு மட்டும் சுயாட்சி அதிகாரம் கிடைத்துவிட்டதா?'