தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுக்கு எதிராக திமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, இன்னும் எத்தனை காலம்தான் காங்கிரஸ் கட்சிக்கு பல்லக்கு தூக்குவது என்றும், உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று தலைமையிடம் வலியுறுத்துவேன் எனவும் காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடர்பான தனது ஆதங்கத்தை காரசாரமான வார்த்தைகளில் வெளிப்படுத்தினார்.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தனது பேச்சுக்கு கே.என். நேரு தற்போது தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், கூட்டணி தொடர்பாக தலைமைதான் முடிவெடுக்க வேண்டும் என்றும், தான் தலைமைக்கு கட்டுப்பட்டு இயங்கிவரும் மாவட்டச் செயலாளர் மட்டுமே எனவும் நேரு விளக்கமளித்துள்ளார்.
மேலும், திருச்சி மாவட்ட திமுக நிர்வாகிகளின் எண்ண ஓட்டத்தையே மாவட்டச் செயலாளர் என்ற முறையில் தாம் பிரதிபலித்ததாகவும், இது கலகக்குரல் அல்ல; கழகத்தின் குரல் எனவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
தன் பேச்சின் வீரியத்தை உணர்ந்து நேரு தன்னிலை விளக்கம் கொடுத்தாலும், அவர் பற்றவைத்துள்ள நெருப்பு தற்போது அணைவதாகத் தெரியவில்லை.