திருச்சி மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாதம் 27, 30ஆகிய தேதிகளில் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் அரசியல் சார்புடைய மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அநேகமான இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது. 24 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளில் திமுக 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் திமுகவைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர். அதேபோல், திருச்சி மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் திமுக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளது. இதனால், 14 ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை திமுக தக்கவைக்கவுள்ளது.
இந்த மாபெரும் வெற்றியை திருச்சி மாவட்ட திமுகவினர் வெகுவாகக் கொண்டாடிவருகின்றனர். இன்று அதிகாலை தேர்தல் முடிவுகள் முழுவதும் வெளியானதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் வெற்றிபெற்ற வேட்பாளர்கள், அவர்களது ஆதரவாளர்கள் அனைவரும் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் அதிக அளவில் குவிந்தனர்.
வெற்றிபெற்றவர்கள் முன்னாள் அமைச்சரும், திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான நேருவை சந்தித்து ஆசிபெற்றனர். இதைத் தொடர்ந்து ஒன்றிய செயலாளர்களுடன் முன்னாள் அமைச்சர் நேரு ஆலோசனை மேற்கொண்டார்.
தலைவர், துணைத் தலைவர் ஆகியோரை தேர்வுசெய்வது குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார். வெற்றிபெற்ற வேட்பாளர்கள், முன்னாள் அமைச்சர் நேரு சால்வை அணிவித்தும் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினர்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: பெரம்பலூரில் அதிக இடங்களைக் கைப்பற்றிய திமுக