தமிழ்நாட்டில் உள்ள சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில். இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக தங்கத்தேர் இழுப்பது வழக்கம். தங்கத்தேர் இழுப்பது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. அதன்பின் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தலின்படி மீண்டும் தங்கத்தேர் இழுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி வெளிப்பிரகாரத்தில் தங்கரத உலா நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் நேற்று (டிசம்பர் 29) உலா வந்த தங்கத்தேரின் முன்பாக செல்போன் பிரியர்கள் செல்பி எடுத்துக் கொண்டுள்ளனர். இதனால் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது. இதனால் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு உள்ளே செல்போனுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் சாமி சிலைகளுக்கு முன்பாகவும், கோயிலில் உள்ள புனித இடங்களுக்கு முன்பாகவும் நின்று செல்ஃபி எடுத்து அதனை சமூகவலைதளங்களில் பதிவிடுவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் மன நிம்மதிக்காக கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆகவே, கோயில்களில் செல்போன் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றக்கூடிய சீதாராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும். கோயில் சிலைகளை புகைப்படம் எடுப்பதே சிலை திருட்டுக்கு வழிவகுப்பதால் கோவிலின் உள்ளே செல்போனுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் அடங்கிய அமர்வில் கடந்த செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின் போது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கோயில்கள் சத்திரம் போல் இருக்கின்றது. திருப்பதியில் கோயில் வாசலில் கூட செல்போன் எடுத்து செல்ல முடியாது. இந்த நிலை தமிழ்நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். மாநிலம் முழுவதும் கோயில்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நகரமயமாக்கல் காரணமாக கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு - உயர் நீதிமன்றம்