திருச்சி: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுக்கா உலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. முடிதிருத்தும் தொழிலாளியான இவர், ஆதிதிராவிட மக்களுக்கு முடி திருத்தம் செய்துள்ளார். இதன் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக அவரையும், அவரது குடும்பத்தாரையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
அலட்சியம் காட்டும் அலுவலர்கள்
இதற்கு காரணமான ஊராட்சி மன்ற தலைவி ராஜம்மாள் மற்றும் அவரது கணவர் தென்னரசு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து பல இடங்களில் புகார் அளித்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.
போராட்டத்தில் குதித்த தொழிலாளர்கள்
இதையடுத்து, முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் மற்றும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்கள் கட்டுமான தொழிலாளர்கள், பொது நலச்சங்கம், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் ஆகியவை சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான முடிதிருத்தும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இந்த ஆர்பாட்டத்தின் போது சம்பந்தப்பட்ட குடும்பத்தை ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ராஜா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதையும் படிங்க: முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு இடையூறு: திமுக பிரமுகர் மீது குற்றச்சாட்டு!