திருச்சியில் கரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடாக ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயிலில் மனுக்களை பெறுவதற்காக புகார் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் அதிகளவில் வந்து மனுக்களை போட்டுவருகின்றனர்.
இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட தரைக்கடை, சிறு கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவை சந்தித்து சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், “திருச்சி தெப்பக்குளம், நந்தி கோவில் தெருவில் பல ஆண்டுகளாக 150க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
தற்போது வெயில், மழையிலிருந்து பாதுகாப்பதற்காக வியாபாரிகள் பந்தல் அமைத்துள்ளனர். இதனை அகற்றுமாறு வியாபாரிகளை காவல்துறையினர் தொந்தரவு செய்து வருகின்றனர். இதனால் வியாபாரம் பாதித்துள்ளது. அதனால் தரை கடைகள் முன்பு பிளாஸ்டிக் பந்தல் அமைக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்க வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.