திருச்சி: திருச்சி பிரஸ் கிளப்பில், தமிழக மக்கள் நலக்கட்சியின் மாநிலப் பொருளாளர் தாஸ் பிரகாஷ் இன்று (பிப்.24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே அய்யம்பட்டி கிராமத்தில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த புனித மதலேன் மரியாள் தேவாலயம் அமைந்துள்ளது.
தேவாலயத்திற்குள் நுழைய விடாமலும், அங்கு நடக்கும் தேர் விழாவின்போதும் அவர்கள் அளிக்கும் வரியை வாங்காமலும் அங்குள்ள பட்டியலின கிறிஸ்தவர்களை ஆதிக்க சாதி கிறிஸ்தவர்கள் எந்த விதத்திலும் சமமாக மதிப்பதில்லை என்று குற்றம்சாட்டினார். இதுகுறித்து அப்பகுதியினர் தங்களை இவ்வாறாக ஒதுக்கி வைத்துள்ளதாக கூறியதைத் தொடர்ந்து விசாரித்து பார்த்ததில் அவை உண்மையெனவும், இது குறித்து திருச்சி மாவட்ட மேதகு ஆயரை தொடர்புகொண்டு கேட்டபோது, அவர்கள் இந்த விவகாரத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் கூறினார்.
எனவே, இதுகுறித்து பல அரசு அதிகாரிகளுக்கும், தமிழ்நாடு மற்றும் இந்திய ஆயர் பேரவைக்கும், உலக கிறிஸ்தவ தலைவரான போப் ஆண்டவருக்கும், ரோம் நகரில் உள்ள பிற மத நிர்வாகிகளுக்கும் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காத திருச்சி மாவட்ட ஆயர், 14 நாட்களுக்குள் இந்த விவகாரத்தில் தலையிட்டு இதிலுள்ள பிரச்சனையைத் தீர்த்து வைக்க வேண்டும் என நோட்டீஸ் அளித்துள்ளோம் எனவும்; இதை ஆயர் செய்யாத பட்சத்தில் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குப் போட தயாராக உள்ளோம் எனவும் கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசிய ஜோசப் என்பவர் கூறுகையில், 'அய்யம்பட்டி கிராமத்தில் திருச்சி மறைமாவட்டத்திற்கு சொந்தமான 120 ஆண்டுகள் பழமையான தேவாலயம் உள்ளது. அங்கு ஏறக்குறைய 70 பட்டியலின கிறிஸ்துவ குடும்பங்களும், 120 ஆதிக்க சாதி கிறிஸ்தவ குடும்பங்களும் உள்ளன. ஆண்டுதோறும் தேவாலயத்தின் சார்பில் நடக்கும் தேர்திருவிழாவில் பட்டியலின கிறிஸ்தவர்கள் அளிக்கும் வரியை வாங்காமல் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்' எனத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, பலமுறை திருச்சி மறைமாவட்ட ஆயரிடம் புகார் அளித்தும், அமைதியான முறையில் பல போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும்; எனவே, தாங்கள் தமிழக மக்கள் நலக்கட்சியினை அணுகி நியாயம் கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம் என்றும் கூறினார். இதைத்தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உரிய நியாயம் கிடைக்காவிடில் நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அப்பகுதியில், தாங்களாக முன்வந்து அளிக்கும் வரியை ஏற்பதில்லை என்றும்; பட்டியலினத்தவர்களை தெருக்களுக்குள் தேர்த்திருவிழாவின் போது, கொடியேற்றத்திற்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் கொடி ஊர்வலம் வருவதில்லை என்றும்; தங்களது பிரச்னைகள் குறித்து பலமுறை முறையிட்டும் திருச்சி மறை மாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் கண்டுகொள்வதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
எனவே, தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களிடம் தீண்டாமை பாகுபாடு காட்டும் திருச்சி கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் மற்றும் அய்யம்பட்டி ஆதிக்க சாதி கிறிஸ்தவர்கள் மீது வாடிக்கனில் உள்ள போப் ஆண்டவரிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆயர் அலுவலகம் முன்பு சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: 'டாணாக்காரன்' பட பாணியில் பழி தீர்க்கும் எஸ்.ஐ: பெண் காவலர் குமுறல்