மத்திய அரசின் பொருளாதார சீர்கேடு நடவடிக்கைகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இன்று மாலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு பொறுப்பாளர் சஞ்சய் தத், காங்கிரஸ் கட்சியின் திருச்சி பொறுப்பாளர் எம்பி வசந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித் குடும்பத்தாருக்கு 10 லட்சம் ரூபாய் காங்கிரஸ் கட்சி சார்பில் நிதி வழங்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, "கொல்லைபுரம் வழியாக மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்கிறது. சரத்பவாரின் கட்சியை உடைத்தது மட்டுமின்றி, அவரது குடும்பத்திலும் உடைப்பு ஏற்படுத்தி பாஜக அரசியல் செய்கிறது. பாஜக அரசு சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது ராஜதந்திரம் கிடையாது. இது பிக்பாக்கெட் அடித்ததற்கு சமமாகும். ஏழைகள் கல்வி கற்க முடியாத அளவுக்கு நுழைவுத் தேர்வுகளும், பொதுத் தேர்வுகளும் கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் சனாதான நடைமுறையை கொண்டு வரவும், பாரம்பரியத் தொழிலை ஏழைகள் மேற்கொள்ளவும் வழிவகை செய்கிறது.
தமிழ்நாட்டில் பாஜக செய்ய முடியாத காரியங்களை தற்போது அதிமுக ஆட்சியின் மூலம் செய்துகொண்டிருக்கிறது. பாஜகவின் பொம்மையாக அதிமுக அரசு உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்வு முறை இல்லை என்பதை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது.
ஆள் பலம், பண பலம் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. பாஜக அரசை விமர்சனம் செய்வார் என்ற ஒரே காரணத்திற்காக ப.சிதம்பரத்தை எவ்வித விசாரணையுமின்றி மோடியும், அமித் ஷாவும் சதி செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்" என்றார்.