கரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் இதற்கு தடுப்பு மருந்தாக கபசுரக் குடிநீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கபசுரக் குடிநீர் பொடியை அதிக அளவில் வாங்கி மருந்து தயாரித்து பருகி வருகின்றனர்.
இதனால் கபசுரக் குடிநீர் பொடிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி பலர் போலியாக கபசுரக் குடிநீர் பொடி தயாரித்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.
இந்த வகையில் திருச்சி கே.கே. நகர், இந்திரா நகரில் ஞானன் ஆயுர்வேத சித்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கரோனா தடுப்பு மருந்தான கபசுரக் குடிநீர் பொடி கிடைக்கும் என ஆன்லைனில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. சமூக வலைதளங்களில் இந்த விளம்பரங்களைப் பார்த்து பொதுமக்கள் பலர் இங்கு நேரில் வந்து கபசுரக் குடிநீர் பொடி பாக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர்.
ஆனால் இங்கு அரசு அங்கீகாரமின்றி கபசுரக் குடிநீர் பொடி பாக்கெட் தயாரித்து விற்பனை செய்வதாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலருக்கு புகார் வந்தது.
இதையடுத்து திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் குறிப்பிட்ட அந்த ஆயுர்வேத மருத்துவமனையில் இன்று திடீர் சோதனை மேற்கொண்டார். அப்போது அனுமதியின்றி தயாரிக்கப்பட்டிருந்த பத்து கிலோ கபசுரக் குடிநீர் பொடி பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தார். இது தொடர்பாக தனியார் மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அரசு அனுமதி இல்லாமல் விற்பனை செய்யப்படும் கபசுரக் குடிநீர் பொடி பாக்கெட்டுகளை யாரும் வாங்கி குடிக்க வேண்டாம். இத்தகைய பொருள்களை வாங்கும் போது தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பு அனுமதி எண் போன்றவற்றை சரி பார்த்து அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொண்டு உரிய ரசீதுடன் வாங்க வேண்டும்” என்றார்.