திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தற்போது 65 வார்டுகளைக் கொண்டுள்ளது. அதனை 100 வார்டுகளாக்க வேண்டும் என்பது அரசியல்வாதிகள் அனைவரின் கருத்தாக உள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் பகுதிகள் வீதம் பொன்மலை, அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம், துவாக்குடி, திருவெறும்பூர் என ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இங்கு மாநகராட்சித் தலைவர் (மேயர்) தலைமையிலான மாநகர் மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் பேணுதல், சாலைகள் பராமரிப்பு, மழைநீர் வடிகால், தெரு விளக்குகள் போன்ற இன்றியமையாத அடிப்படை வசதிகளை (மாநகராட்சிப் பணிகள்) மாநகராட்சி ஆணையரின் வழியாக, மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்களால் செயல்படுத்தப்படுகிறது. ஸ்மார்ட் நகரத்திட்டத்தின் மூலம் வருவாய் குவிந்துவருகிறது.
பெண்களே மேயர்
தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூருக்கு அடுத்த மூன்றாவது மிகப்பெரிய மாநகராட்சி இதுவே ஆகும். மாநகராட்சியாக 1994 ஜூன் 1 அன்று தரம் உயர்த்தப்பட்டது. மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது முதல் இதுவரை பெண்களே மேயர்களாக இருந்துவந்தனர்.
தமிழ்நாட்டின் வேறு எந்த மாநகராட்சிக்கும் இல்லாத சிறப்பு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உண்டு. மாநிலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது இதன் சிறப்பம்சமாகும். தமிழ்நாட்டின் எந்த மூலையிலிருந்தும் சுமார் நான்கு மணி முதல் ஐந்து மணி நேர பயணத்தில் திருச்சியை வந்தடைய முடியும்.
வளர்ந்துவரும் நகரம்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு வருடம் முழுவதும் சுவை மிகுந்த காவிரி நீர் தடையின்றி கிடைக்கிறது. சென்னையை அடுத்து அதிகமாக பன்னாட்டு விமானங்கள் இங்குதான் தரையிறக்கப்படுகின்றன. டெல்டா மாவட்டங்களின் தலைநகரமாகப் போற்றப்படுகிறது. இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் நகரம், விமான நிலையம், ரயில் நிலையம் என அனைத்துப் பெருமைகளும் திருச்சியே கொண்டுள்ளது.
உலகின் மிகப் பழமையான மலைக்கோட்டை திருச்சியின் அடையாளமாக இருக்கின்றது. இந்தியாவின் மிகப் பெரிய திருக்கோயிலான ஸ்ரீரங்கம் திருச்சி மாநகராட்சியில் அமைந்துள்ளது. அதேபோல பஞ்சபூத தலமான அப்பூஸ்தலம் திருவானைக்காவில் அமைந்துள்ளது. சமயபுரத்தில் மாரியம்மன் கோயில், வயலூரில் முருகன் கோயில் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். ஓய்வூதிய காலத்தை இங்கே கழிக்க வேண்டும் என முதியோர்கள் எண்ணுவதால் நகரம் விஸ்தரிப்பு அடைந்துகொண்டே செல்கிறது.
அமைச்சர் கே.என். நேரு அறிமுகம்
கே.என். நேரு அரசியலுக்கு அறிமுகமானது ஒரு உள்ளாட்சித் தேர்தலின் மூலம்தான். ஆம், புள்ளம்பாடி சேர்மனாக இருந்தவருக்கு லால்குடி சட்டப்பேரவைத் தொகுதி ஒதுக்கப்பட்டது. அதுமுதல் இன்றுவரை கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக அசைக்க முடியாதவராக இருக்கிறார்.
அதேபோல தன்னுடைய மகன் அருணை உள்ளாட்சித் தேர்தலில் களமிறக்க முடிவுசெய்திருப்பதாக கிசுகிசுக்கிறார்கள் உடன்பிறப்புக்கள். இதுவரை பெண்களே மாநகராட்சி மேயர்களாக கோலோச்சிவந்த நிலையில், இம்முறையாவது ஆண்களுக்கு ஒதுக்கப்படுமா என்பது அரசியல்வாதிகள், மாநகர மக்களின் மில்லியன் டாலர் கேள்வி என்பது ஒருபுறம் இருக்க, அவரின் ஆருயிர் மகனுக்கா அல்லது அன்பைப் பெற்ற முன்னாள் துணைமேயர் அன்பழகனுக்கா எனப் பட்டிமன்றம் நடத்த ஆரம்பித்துவிட்டனர் பொதுமக்கள்.
இதையும் படிங்க: நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டப் போராட்டம் - அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்