திருச்சி: மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகள் தொடர்ந்து போராடிவருகின்றனர். இந்த நிலையில் பல மாநில விவசாய சங்கங்கள் இணைந்து டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன.
இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
திருச்சி ரயில் நிலைய பிரதான நுழைவாயிலில் மூன்று அடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. ஆனால் காவல் துறையினரின் தடுப்புகளை மீறி கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் ரயில் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: வேளாண் சட்டங்களை ரத்து செய்க - ஸ்டாலின், அழகிரி கூட்டறிக்கை