திருச்சி: ஆண்டுதோறும், கார்கில் வெற்றி நினைவுநாள் ஜூலை 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கார்கில் போரில் மறைந்த வீரர் மேஜர் சரவணன் நினைவிடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேஜர் சரவணன் பாரத நாட்டை பெருமை கொள்ளச் செய்த ஒரு மாவீரர். இவர் கடந்த 1995ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி இந்திய ராணுவத்தின் பீகார் படைப் பிரிவில் வீரராக சேர்ந்தார். அவர் பணியில் காட்டிய அக்கறையும், இலட்சிய உணர்வும் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது.
தாய் நாட்டின் எல்லையை எதிரிகள் ஆக்கிரமிக்க முயற்சித்த போதெல்லாம் அவர்களை முறியடிக்க முன்னணியில் பாய்ந்தவர், மேஜர் சரவணன். இந்த தமிழ் வீரர் கடந்த 1999ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி பாரத எல்லையில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 14 ஆயிரத்து 229 அடி உயரத்தில் அமைந்துள்ள பட்டாலிக் பகுதியில் ஊடுருவி இருந்த எதிரிகளை வீழ்த்தும் பணி அவருக்கு வழங்கப்பட்டது.
அங்கு கடும் குளிர் மற்றும் உறைபனியில் சரவணனின் தலைமையில் இந்திய வீரர்கள் துடிப்போடு பணியாற்றினார்கள். மே 29ஆம் தேதி விடியற்காலை 4 மணி அளவில் திகைத்துப் போன எதிரிகள், நமது வீரர்கள் மீது குண்டு மழை பொழியத் தொடங்கினார்கள். இருப்பினும் உயிரை துச்சமாக மதித்து வேகமாக முன்னேறினார் மேஜர் சரவணன், ஏவுகணையால் பகைவர்கள் இருவரை வீழ்த்தினார். இந்த கடும் யுத்தத்தில் சரவணனும் படுகாயமுற்றார்.
இருப்பினும், தன் உடலில் கொப்பளித்து சிதறிய ரத்தத்தை துடைத்தெறிந்து வீரத்துடன் முன்னேறினார். மேலும் இரு எதிரிகளை நேருக்கு நேர் சுட்டு வீழ்த்தினார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரிகளின் துப்பாக்கி குண்டுகளில் ஒன்று மேஜர் சரவணன் தலையை தாக்கியது. உயர்த்திப் பிடித்த துப்பாக்கியுடன் போரின் வெற்றிக்கு வித்திட்ட மேஜர் சரவணன் (மே 24) அதே நாள் காலை 6.30 மணிக்குப் பலியானார்.
இந்திய எல்லையைக் காக்கும் பணியில் ஈடுபட்டு நாட்டுக்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்த கார்கில் போர் வீரர் மேஜர் சரவணன் நினைவாக, திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டு உள்ளது. திருச்சியில் பல்வேறு நிகழ்வில் கலந்து கொள்ள திருச்சிக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து வீர அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்வில் தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, பெரிய கருப்பன், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கணேசன், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் திமுக கட்சியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அனல் பறக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் பணிகள்; திருச்சியில் திரளும் திமுகவினர்